பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இடைநிறுத்து! ஐரோப்பிய ஒன்றியம் இடித்துரைப்பு
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இடைநிறுத்துமாறு இலங்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 54 வது அமர்வில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கிறது.
அதேவேளையில், கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் பயனுள்ள உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது.
மேலும், பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் தொடர்பில் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் சமமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
அத்துடன், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் பல பலவந்தமான காணாமல் போன சம்பவங்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான திட்டங்கள், தமிழ் அரசியல் கட்சிகளுடன் அதிபரின் உரையாடல் மற்றும் தொல்பொருள், வனவியல் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை நிறுத்துவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இவை இன்னும் உறுதியான நடவடிக்கைகளாக மாற்றப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையை செயல்படுத்தவும், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எந்த விதமான பலத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.