News

தலைமன்னார் – கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் மக்கள் விசனம்

கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னாருக்கான தொடருந்து சேவை சுமார் 9 மாதங்களின் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு ஆசன முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியாக கோரிக்கைகளுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மடு திருத்தலத்தில் வைத்து அண்மையில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு தொடருந்து சேவை கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்படும் தொடருந்து, அன்றைய தினம் இரவு இரவு 10.48 மணிக்கு தலைமன்னாரை சென்றடையும். பின்னர் காலை 4.15 மணிக்கு தலைமன்னாரில் இருந்து புறப்படும் தொடருந்து அன்றைய தினம் காலை 10.34 மணியளவில் கொழும்பில் கோட்டை தொடருந்து நிலையத்தை சென்றடையும்.

இந்த நிலையில் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட ஆசன முன்பதிவு மற்றும் 2 ஆம் வகுப்பு ஆசன முன்பதிவுகளை மேற்கொண்டு மன்னார் மாவட்டத்தில் இருந்து மக்கள் பயணங்களை தொடர முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு ஆசன முன்பதிவுகளை மேற்கொண்டு மக்கள் பயணங்களை மேற்கொள்கின்ற போதும் தலைமன்னாரில் இருந்து மக்கள் முன்பதிவுகளை மேற்கொண்டு கொழும்பிற்கு செல்ல முடியாத நிலையில் தொடருந்து நிலையங்களில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தலைமன்னார் தொடக்கம் மடு வரையிலான தொடருந்து நிலையங்களில் ஆசன முன்பதிவு செய்யக்கூடிய வசதிகள் இது வரை இல்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதான தொடருந்து நிலையங்களில் காணப்பட்ட கணினி வசதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளமையினாலேயே குறித்த முன்பதிவுகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதனால் மன்னார் மாவட்ட மக்கள் சாதாரண பயண சீட்டுக்களை பெற்று தமது பயணத்தை தொடர்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடையத்தில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த வசதிகளை ஏற்படுத்துமாறும், யாழ்ப்பாணத்திற்கான யாழ். தேவியின் செயற்பாடுகளில் தடங்கள் ஏற்பட்டால் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரித கதியில் செயல்பட்டு தீர்வை பெற்றுக்கொடுப்பது போல் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button