பொருளாதார நெருக்கடி :அதிகரிக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை
இலங்கையில் கடந்த ஆண்டில் (2022) இரண்டு இலட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து இருநூற்று முப்பத்தைந்து (258,235) பேர் புதிதாக குடும்பக் கட்டுப்பாட்டுக்காக பரிந்துரைக்கப்பட்டனர், அவர்களில் முப்பதாயிரத்து எழுநூற்று பத்தொன்பது (30,719) பேர் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், இலங்கையில் இரண்டு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து நானூற்று தொண்ணூற்று இரண்டு (225,492) பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் முப்பத்தி இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து மூன்று பேர் புதிதாக குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளில், 2022 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு (2022) குடும்பத் திட்டங்களின் கீழ், முப்பத்தாறாயிரத்து அறுநூற்று நாற்பத்தைந்து பேர் லூப் அணிந்திருந்தனர் மற்றும் ஐம்பதாயிரத்து இருநூற்று ஐம்பது பேர் விழுங்கும் மாத்திரைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 86 ஆயிரத்து ஐநூற்று முப்பத்து நான்கு பேர் தடுப்பூசி போட பரிந்துரைக்கப்பட்டனர்.
பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடத்தில் அதிகமானோர் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை நாடியுள்ளதாகவும் சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்