News

மீண்டும் எம்மோடு ஒன்றிணையலாம்: நாமல் ராஜபக்ச

மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயட்பட்டவர்கள் மீண்டும் தாராளமாக எங்களுடன் ஒன்றிணையலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவுடன் கொழும்பில் உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (10) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அவர் மேலும் கூறியதாவது “கட்சி என்ற ரீதியில் பலமாகச் செயற்படுகின்றோம்.அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களுக்குத் தயாராகவே உள்ளோம்.

அதற்கான நடவடிக்கைகளைத் தற்போது முன்னெடுத்துள்ளோம்.தேசிய தேர்தல்களில் கட்சியின் கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்படுவோம்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் கொள்கைக்கு எதிராக 45 வருடகாலம் அரசியல் செய்த ரணில் விக்ரமசிங்கவை நாட்டுக்காக அதிபராக்கி அவருடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.

எமக்கு எதிராகச் செயற்பட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க எம்முடன் இணைய முடியுமாயின் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பல்வேறு காரணிகளால் பிரிந்து சென்றவர்கள் தாராளமாக மீண்டும் ஒன்றிணையலாம்.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் தரப்பினர் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். அதற்குக் காலவகாசம் வழங்கப்படும்.

சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் தோற்றம் பெற்றுள்ளது. எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் அதிகரிப்பதால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளோம்.” – என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button