News

இறக்குமதி தடை தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

இப்போது இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக வழமைப் போன்று இறக்குமதிகள் அதிகரிக்கப் போகின்றன. இறக்குமதிகள் அதிகரிக்கின்ற போது டொலருக்கான கேள்வி அதிகரிக்கும்.

அவ்வாறு டொலருக்கான கேள்வி அதிகரிக்கின்ற போது டொலருக்கான விலையும் அதிகரிக்கும். இலங்கை ரூபாவினுடைய தேய்வு ஆரம்பமாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக அரசாங்கம் பல பொருட்களுக்கு இறக்குமதி தடையை விதித்திருந்தது. இதனை தற்போது அரசாங்கம் தளர்த்துவதாக அறிவித்திருந்தாலும் கூட இதன் பின்னணியிலே இருப்பது சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிபந்தனை ஆகும்.

சர்வதேச நாணய நிதியம் இந்த இறக்குமதி தடைகளைப் பேணுவதை விரும்பவில்லை. இறக்குமதிகளை அனுமதிப்பது தொடர்பில் சர்வதேச நாணயம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்திருக்கின்றது. ஆனாலும் கூட, மிக விலைக் கூடிய, வாகனங்கள், தனியார் வாகனங்கள் போன்றவற்றை தவிர ஏனைய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் இந்த இறக்குமதியை கட்டுப்படுத்த நேர்ந்தமையினால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவின் காரணமாக, உள்ளூரிலே மேற்கொள்ளப்படும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் உள்ளது.

அவற்றின் விலைகள் அதிகரித்தமை ஒருபுறம் இருந்தாலும் கூட அந்த பொருட்களை இலங்கையில் பெற்றுக்கொள்வது கடினமாக இருந்த காரணத்தினாலே பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

இவ்வாறு இலங்கையில் கைத்தொழில் துறை வீழ்ச்சியை சந்தித்தமைக்கு இந்த இறக்குமதி தடையும் ஒரு காரணமாக அமைந்தது.

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் பார்த்தால், அதில் 20 சதவீதம் மாத்திரமே பொதுமக்களின் நுகர்வுப் பொருட்களாக காணப்படுகின்றன.

ஏனையவை நாட்டுக்கு அத்தியாவசியமான இயந்திரங்கள் மற்றும் பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய பொருட்களாகத்தான் இருக்கும்.

இப்போது இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக வழமைப் போன்று இறக்குமதிகள் அதிகரிக்கின்றன. இறக்குமதிகள் அதிகரிக்கின்ற போது டொலருக்கான கேள்வி அதிகரிக்கும். அவ்வாறு டொலருக்கான கேள்வி அதிகரிக்கின்ற போது டொலருக்கான விலையும் அதிகரிக்கும். இலங்கை ரூபாவினுடைய தேய்வு ஆரம்பமாகும்.

அதனை நாங்கள் இப்போதிருந்தே நிகழ ஆரம்பித்திருப்பதை காணலாம். சிறிது சிறிதாக ரூபாவுக்கு எதிராக டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்வதை அண்மைய நாட்களில் காணக்கூடியதாக உள்ளது.

எதிர்காலத்தில் பெரிய அளவில் இறக்குமதிகள் அதிகரிக்குமாக இருந்தால் டொலருக்கான கேள்வி அதிகரிக்கும். நிச்சயமாக நாட்டினுடைய டொலர் கையிருப்பிலும் இது தாக்கத்தைச் செலுத்தும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button