News

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.!

பாராளுமன்றம் ஒக்டோபர் 17 முதல் 20 வரை கூடவுள்ளதாகப் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.

அதற்கமைய, பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு தினத்திலும் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்குக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஒக்டோபர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணிக்கு, உயிர்த்த ஞாயிறு தினம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ‘செனல் 4’ அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதனை அடுத்து, பலபிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக் ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன், ஸ்ரீ லங்கா பெப்டிஸ்ட் சங்கம் (கூட்டிணைத்தல்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை அரசாங்கக் கணக்குக் குழுவின் (COPA) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

2023 ஒக்டோபர் 18 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை சிரேட்ட அறிவுறுத்தும் சட்டத்தரணிகள் என்ற கௌரவிப்பை அளித்தல் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் 2339/06 மற்றும் 2347/10 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனை அடுத்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2329/46 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் 2336/72 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தீர்மானம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2334/23, 2336/69, 2338/58 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட மூன்று கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழ் 2334/24, 2340/42 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு அறிவித்தல்கள், நிதிச் சட்டத்தின் கீழ் 2329/19, 2342/24 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் மற்றும் மது வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2336/70 மற்றும் 2338/57 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு அறிவித்தல்கள் அன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை சபை ஒத்தவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 2323/41 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் 2294/54 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதனை அடுத்து, பி.ப. 5 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானத்தை விவாதமின்றி அங்கீகரிப்பதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பி.ப. 5 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு அமைய விவாதம் இடம்பெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button