உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி வெளியிட்ட புது தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாகும் அறிக்கைகளில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (17) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் எந்தவொரு குழுவாலும் வழங்க முடியாத இரகசிய அறிக்கை தங்களிடம் இருப்பதாகவும், அந்த அறிக்கையினை எச்சந்தர்ப்பத்திலும் யாருக்கும் வழங்க முடியாது என்றும், பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்திருந்ததாக அவர் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆணையாளரால் தனியாக ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு அப்போதைய அதிபர் கோட்டபாய ராஜபக்சவுக்கு சமர்ப்பித்திருந்தனர்.
ஆனால் அப்போதைய அதிபர் அதனை வெளிப்படுத்தாமல் இரகசியமாகவைத்திருக்க உத்தரவிட்டிருந்தார்.
பின்னர், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தன்னிடம் ஒரு அறிக்கை இரகசியமாக உள்ளதாக கூற, மறுபக்கம் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட கோப்பும் இரகசியமாக வைத்திருக்கப்பட்டது.
இதிலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரைக்கும் நடத்திய விசாரணைகள் அனைத்தும் முற்றிலும் நியாயமற்றதும், பிழையானதும் என்று தான் கூறவேண்டும் ஏனெனில் அவை முழுமை பெற்ற அறிக்கைகளாக இல்லை எனவும் அவர் இந்த வேளையிலே சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் தற்போது சனல் 4 அலைவரிசையின் ஆவணப்படம் தொடர்பில் அதிபரால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பிலும் தான் எதிர்க்கட்சித்தலைவரின் நிலைப்பாட்டிலேயே இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
ஏனெனில் இதற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிவுக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன, அவையும் நியாயமான அறிக்கைகளை முன்வைக்கவில்லை அதே போல் இந்த குழுவும் போலியான ஆவணங்களையே சமர்ப்பிக்கும் என்று முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.