இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பில் வற் வரி ஏய்ப்பு செய்ததற்காக குறைவான விலைப்பட்டியல் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழு, விசாரணையை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்கத்தின் கணக்காய்வு அறிக்கைகளை கோபா குழு ஆய்வு செய்ததாக, அதன் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதன்போது வற் வரியை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக நிலக்கரி இறக்குமதிகள் குறைவான விலைப்பட்டியல் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாட்டில் ஏராளமான நிர்வாக குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரி ஏய்ப்பின் அடிப்படையில், 187 மில்லியன் ரூபா குறைந்த கட்டணமாக அறவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின்படி, கிழக்கு மாகாணத்தில் நீர் அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றினால் நடத்தப்படும் களஞ்சியத்துக்கு போலியான உள்ளூர் தகவல்கள் தயாரிக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு பெரும் தொகை நிதி கிடைக்கச்செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த தனியார் நிறுவனம், 5,139,621 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கையிருப்புக்களை களஞ்சியத்தில் வைத்திருந்தது.
எனினும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் மூலம் 6,350,364 அமெரிக்க டொலர்கள் கையிருப்புகள் மாத்திரமே காட்டப்பட்டுள்ளன.
இதனால் குறித்த நிறுவனத்திற்கு மேலதிகமாக 1,210,743 அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.