அரிசி இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்ட தகவல்
2022-2023 பருவகால அறுவடையின் அடிப்படையில் நாட்டில் சுமார் 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இருப்பதாகவும் அதற்கேற்ப எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை என தெரியவந்துள்ளது.
சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாடு தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று(22) நடத்திய கலந்துரையாடலில் குறித்த விடயத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசி மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு வர்த்தக சமூகத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 2.4 மில்லியன் மெற்றிக் தொன் என்றாலும், 08 இலட்சம் ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, குறித்த பருவத்தில் 2.7 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளதாக இந்தக் கலந்துரையாடலில் மேலும் தெரியவந்துள்ளது.
அத்துடன், BG 360 அல்லது கீரி சம்பா அரிசி வகை 175,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு 5000 மெற்றிக் தொன் அறுவடை கிடைத்துள்ளதாகவும், இதனால் நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் நாட்டின் மொத்த நெற்செய்கை நிலப்பரப்பில் 07 வீதமான கீரி சம்பா அரிசி வகையே பயிரிடப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.