கிரிக்கெட் விசாரணையிலிருந்து கோப் குழுவின் தலைவர் நீக்கம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் இருந்து பொது நிறுவனங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நீக்கப்பட்டுள்ளார்.
அதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, கோப் குழுவின் மற்றுமொரு உறுப்பினரின் தலைமையின் கீழ் ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விசாரணைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா நிறுவனம் தொடர்பில் இதற்கு முன்னர் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சில விடயங்களை வெளிப்படுத்துவதை நிறுத்துமாறு கை சமிக்ஞை செய்தமை தொடர்பில் கோப் குழுவின் தலைவர் மீது பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதேவேளை, கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கத் தயாராக இருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையும் பிற்போடப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.