இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் வீடுகள்!
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு ஒப்பந்தந்தங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது.
அதன்படி தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாகாண பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நேற்றைய தினம் (28) வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக்குவது குறித்து இரண்டு தனித்தனி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அபிவிருத்தி ஒத்துழைப்புப் பிரிவின் ஆலோசகரும் தலைவருமான எல்டோஸ் மத்யூ புன்னூஸ், மாகாணப் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரத்னசிறி களுபஹன மற்றும் தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் பொது முகாமையாளர் கங்கணமாலகே அஜந்த ஜானக ஆகியோர் இந்த இரண்டு உடன்படிக்கைகளிலும் கையொப்பமிட்டனர்.
மேலும் இது குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டமானது நாட்டின் 11 மாவட்டங்கள் மற்றும் 6 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமல்லாமல் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும், பெருந்தோட்டப் பகுதிகளில் 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீட்டுத் திட்டத்திற்கு அப்பால், இலங்கையின் 25 மாவட்டங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்களின் கீழ் 2400 வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.
இதுவரை இந்தியாவின் ஒத்துழைப்பு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ள நிலையில், 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியிருந்தது.
மேலும், இதுவரை இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 60,000 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.