வங்காள விரிகுடாவில் புயல்!
தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள நாட்டிலிருந்து நகர்கிறது.
இது நாளை (04) ஆகும் போது இந்தியாவின் வட தமிழக கடற்கரை வரையை நகர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை (05) தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடைக்கிடையில் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.