News

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அறிமுகமாகியுள்ள புதிய கடன் திட்டம்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக “மனுசவி” என்ற புதிய கடன் திட்டம் ஒன்றினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று (04) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுக்கிடையில் இது குறித்த முன்மொழிவு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு தொழிலைத் தொடங்குதல் அல்லது விரிவுபடுத்துதல், வீடு வாங்குதல், கட்டுதல் அல்லது விரிவுபடுத்துதல், நிலம் அல்லது வாகனம் வாங்குதல், குழந்தைகளின் உயர்கல்வி அல்லது பிற உற்பத்தி நோக்கங்களுக்காக கடன் பெறலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் கடன் திட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி பெறக்கூடிய கடனின் அதிகபட்ச வரம்பு 2 மில்லியன் ரூபாயாக இருக்கும் அதே வேளை, கடன் வாங்குபவரிடம் இருந்து வசூலிக்கக்கூடிய அதிகபட்ச வட்டி விகிதம் 8% ஆகவும் காணப்படுகிறது, மேலும் கடன் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சமாக 36 மாதங்கள் வழங்கப்படும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடன் பெறுவதற்கு தகுதி பெறுவதற்கு புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

கடனிற்கு விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பதாரி புலம்பெயர்ந்த தொழிலாளி உரிமம் பெற்ற வணிக வங்கியில் தனி அல்லது கூட்டு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கினை பராமரிக்க வேண்டும்.

மேலும், அந்தந்தக் கணக்கிற்கு (குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்குள்) அந்நியச் செலாவணியை அனுப்பியிருக்க வேண்டும்.

கடனைப் பெற விரும்புபவர்கள், வெளிநாடு செல்வதற்கு முன் அல்லது வெளிநாட்டில் இருக்கும்போது விண்ணப்பங்களை அந்தந்த வங்கிக்கு அனுப்பலாம், அதே சமயம் விண்ணப்பதாரர் தனது நெருங்கிய உறவினருக்குத் தங்கள் சார்பாக கடன் தொகையைப் பெற அதிகாரம் வழங்கும் சட்டத்தரணி மூலம் அங்கீகாரத்தினைப் பெற முடியும்.

இந்த முறைமையின் கீழ், கடன்களை இலங்கை ரூபாயில் திருப்பிச் செலுத்த முடியாது, ஆனால் வெளிநாட்டு வேலை முடிந்தவுடன் இலங்கைக்கு திரும்பிய பின்னர் இலங்கை ரூபாயில் கடனைத் தீர்க்க முடியும்.

இந்த முயற்சிக்கு பங்களிக்கும் பின்வரும் உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு 4% வருடாந்த வட்டி விகிதத்தில் இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய மேம்பாட்டுத் துறை மூலம் மறுநிதியளிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, சம்பத் வங்கி, செலான் வங்கி, கார்கில்ஸ் வங்கி, டிஎப்சிசி வங்கி,தேசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய வங்கி, யூனியன் வங்கி ஆகிய வங்கிகள் இந்த கடனுதவிக்கு பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button