News

தனியார் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முறைமை : பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

நாட்டில் தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பல்வேறு அநாகரீகமான நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

தனியார் பேருந்துகளில், பயணிக்கும் பயணிகள் தமது முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் ‘வோக்கி டோக்கி’ (walki talki) அலைபேசி முறைமையை சகல பேருந்துகளிலும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அடுத்துவரும் இரண்டு வாரங்களில் பயணிகளின் வசதிக்காக இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அதன்படி, அனைத்து தனியார் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் முறைமை பொருத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக உணரும் பயணிகள் பேருந்துக்குள் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் தங்களது முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள், திருட்டுகள், பேருந்தின் வேகம், கவனக் குறைவாக வாகனத்தை செலுத்தல், நடத்துனர்களினதும் சாரதிகளினதும் தவறான நடத்தைகள் மற்றும் பல்வேறு சட்டவிரோத செயல்களைக் குறைக்க இந்த திட்டம் உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகளுக்கு சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வசதியுடன் கூடிய பயண அனுபவத்தை கொடுக்கும் நோக்கில் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button