மக்களுக்குப் பேரிடி : அதிகரிக்கப்படும் லிட்ரோ எரிவாயு விலை
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது ரூ.3565 ஆக இருக்கும் 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 18% அதாவது 640 ரூபாயால் உயரும்.
இந்நிலையில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
8000 மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் மற்றும் சுமார் 80 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம் மூலம் நிறுவனம் 4.5 பில்லியன் இலாபம் ஈட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம், அரச துறையின் மதிப்புமிக்க நிறுவனங்களை மூடி, தனியார் வர்த்தகர்களுக்கு வழங்க, அனைத்து திட்டங்களையும் அரசு தயார் செய்துள்ளது என தெரிவித்தார்.