மன்னார் காக்கையன்குளம் பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.!
பாடசாலைக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று 20/12/2023 மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான காக்கையன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் நிதி விடுவிக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நிதியை விடுவிக்குமாறு கோரி குறித்த கிராமத்தில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்…
“எங்கே, எங்கே பாடசாலையில் இரண்டு மாடி கட்டிடம் எங்கே?
“எங்கே எங்கே பாடசாலைக்கு வந்த ஆறு கோடி எங்கே” போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில் ,
காக்கையன்குளம் முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்னைநாள் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்தபோதும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக குறித்த நிதி கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கல்வி அமைச்சு இந்த வருடம் 2023 குறித்த நிதியை எமது பாடசாலைக்கு விடுவிப்பதாக அறிவித்திருந்தது.
இருந்தபோதும் சில அரசியல் தலையீடு காரணமாக குறித்த நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே எமது கிராமத்தின் பாடசாலையில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாக ஜனாதிபதி தலையிட்டு இந் நிதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.