பாராளுமன்றில் கட்சி தாவல் அறிகுறி!
புதிய வருடத்தில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் நாளில் பாராளுமன்றத்தில் காட்சி தாவல்கள் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்.
இதன் அடிப்படையில் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கட்சி தாவல் தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள அந்த குழு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கிடையில், அரசாங்கம் கலைக்கப்படும் என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனமும் அதன் மீது திரும்பியுள்ளது.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு கட்சி தாவல்கள் துரித கதியில் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
18 அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய கூட்டணிக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.