அஸ்வெசும தொடர்பில் புதிய தீர்மானம்
அஸ்வெசும பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் கடினமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரச வங்கிகளின் பிரதிநிதிகளுடன் அஸ்வெசும திட்டத்தை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பது தொடா்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
20 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலத்திட்ட உதவிகளால் தற்போது 14 இலட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெறப்பட்ட 11 லட்சத்திற்கும் அதிகமான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளில் கிட்டத்தட்ட 60% பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 31 க்கு முன்னர் அந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் கோரல் ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும், மேலும் 4 இலட்சம் பேர் நலன்புரிச் செயற்பாட்டில் உள்வாங்கப்படுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.