நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கி புதிய திட்டம்: அமைச்சர் அறிவிப்பு
நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து பொதுவான பாதுகாப்பு அமைப்பு தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தொழில் உறவுகள் அமைச்சர் என்ற வகையில் இந்த நாட்டின் அனைத்து தொழிலாளர்களையும் சமமாக பேண வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
கருசரு வேலைத்திட்டத்தின் கீழ் 20 விடயங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம். எவ்வாறாயினும் சகலரினதும் பங்கேற்புடன் சட்டத்தரணிகள் சங்கம், வைத்திய சங்கம், கட்டடக்கலைஞர் சங்கம் போன்ற சங்கமொன்றை நிறுவ எதிர்பார்த்துள்ளோம்.
இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இது ஒரு தொழிற்சங்கம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறே, இதனுடன் தொடர்புடைய சட்டங்கள் வேலை வாய்ப்பு காப்பீட்டு சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த உள்ளது.
மேலும் தொழில் கண்ணியத்திற்கான மேலதிக அத்தியாயமொன்று புதிய சட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளோம். இன்று நீங்கள் அமைக்கும் சங்கம் உங்கள் தரத்தை நிர்ணயிக்கும். அதை பல அரச நிறுவனங்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கட்டுமான பணியின் போது கட்டடக் கலைஞரின் கையொப்பம் எவ்வாறு அவசியமோ அவ்வாறே மின்னியலாளர்களுக்கான ஒரு திட்டத்தை எங்களால் செயற்படுத்த முடிந்தது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மின்னியலாளர்களின் மதிப்பையும் பெற்று கொடுக்க முடிந்துள்ளது.
இதன் பின்னர் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்று தனியான நிதியங்களோ விவசாய காப்புறுதி உட்பட ஏனைய காப்புறுதி திட்டங்கள் இன்றி நாட்டின் தொழிலாளர்களுக்கான பொதுவான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்த உள்ளது.
இதற்கான பூர்வாங்க வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மூன்று அல்லது நான்கு மாதங்களில் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.