விமான நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கைகள்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட நாட்டிலுள்ள சகல விமான நிலையங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன்,சகல விமான நிலையங்களினதும் பராமரிப்பு நடவடிக்கைகளை விரிவு படுத்துவதற்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
புதிதாக பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ள 135 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வு இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் இடம் பெற்றது.
இதில்,உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது விமான நிலையங்களில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 1120 என்றும் தெரிவித்த அமைச்சர், அந்த எண்ணிக்கையை 1325 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் எந்த ஒரு பொருளோ அல்லது போதைப் பொருள்களையோ சட்டவிரோதமாக எடுத்து வர முடியாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே வேளை, பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தமது கடமைகளை முறையாக முன்னெடுப்பர் என, தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.