கொழும்பு நகரில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை இடமாற்றம் செய்ய தீர்மானம்!
கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்ட 500 அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை கொழும்பு மாநகர சபை இடமாற்றம் செய்ய உள்ளதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தனதெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த அங்கீகரிக்கப்படாத கட்டிட நிர்மாணங்களில் பெரும்பாலானவை நீரின் ஓட்டத்தை தடை செய்துள்ளதால் கொழும்பு நகருக்குள் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
இவ்வாறான குடியிருப்புகள் நீர்வழிகளை நேரடியாக தடுப்பதாகவும் மற்றவை கால்வாய் படுகைகளில் கட்டப்பட்டதாகவும் காணப்படுகிறது.
இவை பெரும்பாலும், பேரா ஏரி, மருதானை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களைச் சுற்றி அமைந்துள்ளன.”என்றார்.
இந்த கட்டிடங்களை இடிப்பதன் மூலம் அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தாமல், பொறியாளர்களின் உதவியுடன் மாற்று தீர்வுகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதற்கு நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபையுடன் (யுடிஏ) ஒரு உரையாடலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கொழும்பு நகருக்குள் சுமார் 22 வெள்ளப்பெருக்கு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தை தவிர்க்க குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை வகுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக உரிமையாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தி, பின்னர் பிரதேச செயலாளர், இலங்கை நில மீட்பு அபிவிருத்திக் கழகம் போன்றவற்றுடனும் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்த வேண்டும்.
அனைத்தையும் சீராக முடித்த பின்னரே ஒவ்வொரு குழுவாக இடமாற்றம் செய்வதே திட்டம் என கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் சில குடும்பங்கள் தங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டாலும் இடம்மாற விரும்பவில்லை எனத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.