சீனி மோசடி – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!
கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.
ஒக்டோபர் 13, 2020 திகதிய வர்த்தமானி 2197/12 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சீனி இறக்குமதிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியில் 99.5% குறைக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து இதன்போது குழு தனது அதிருப்தியை சுட்டிக்காட்டியது.
நுகர்வோரின் செலவிலிருந்து குறைக்கப்பட்ட வரி விகிதத்தை நியாயமற்ற வகையில் ஒரு சில பாரிய நிறுவனங்களுக்கு அனுகூலம் பெறுவதற்கு இடமளித்து இந்தவொரு பொறுப்புக்கூறும் முறையொன்றும் செயற்படுத்தப்படவில்லை என குழு சுட்டிக்காட்டியது.
குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்தளவு வரி அறவிடுவது என்பது தொடர்பில் விசாரித்த குழு, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியது. சீனி மோசடி சம்பந்தமான வரி அறவிடுவதன் தற்போதைய நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே இதன் நோக்கமாகும்.
இந்தச் சிக்கலை மேலும் ஆராயும் வகையில், சீனி மீதான விசேட வியாபாரப் பண்ட வரியை ஒரு கிலோவுக்கு 0.25 சதத்திலிருந்து ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாக மீண்டும் மாற்றும் முன்மொழிவு தொடர்பான குழுவின் கரிசனையை குழு எடுத்துக்காட்டியது. சம்பந்தப்பட்ட பாரிய நிறுவனங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க அனுமதிக்கும் அதே வேளையில் சராசரி இலங்கையரிடம் இருந்து 30 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் நிதியமைச்சின் நோக்கம் இதன்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பொது மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமைகளை சுமத்துவதற்கு முன்பு தவறு செய்பவர்களைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.
மேலும், விநியோகஸ்தர்களால் கடைப்பிடிக்கப்படாத அதிகபட்ச சில்லறை விலை (MRP) பற்றிய சிக்கலை நிவர்த்தி செய்ய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் (CAA) அதிகாரிகளுடன் குழு கலந்துரையாடியது.
342 சுற்றிவளைப்புகள் நடத்தி, MRPயை மீறும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு அபராதம் விதித்த போதிலும், வர்த்தமானியில் அதிகபட்ச மொத்த விற்பனை விலை இல்லாததால், மொத்த விநியோகஸ்தர்களுக்கு அபராதம் விதிப்பதில் சவால்கள் உள்ளதாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசேட வியாபாரப் பண்ட வரி மற்றும் இறக்குமதி விலைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, MRPயை விதிப்பை குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு குழு பணிப்புரை வழங்கியது. மேலும், மொத்த விநியோகஸ்தர்கள் MRP க்கு மேல் விற்பனை செய்வது மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்மொழியுமாறு குழு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்தது.
அதற்கு மேலதிகமாக, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழான கட்டளையின் விளைவு குறித்துக் குழு ஆராய்ந்தது. பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துதல் மற்றும் அந்நியச் செலாவணி இருப்புக்களை திறம்பட நிர்வகித்தல் ஆகியவற்றின் முக்கிய நோக்கத்துடன், இலங்கையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான நிதிகளின் நகர்வு மற்றும் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்த வடிவமைக்கப்பட்ட ஏற்பாடுகள் இந்தக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய இடம்பெயர்வு கொடுப்பனவு 50,000 அமெரிக்க டொலராகக் காணப்படுவதுடன், தற்காலிக வீசா அனுமதிப்பத்திரத்துக்கு 20,000 அமெரிக்க டொலராகக் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை தனிநபர்கள் தமது சொந்த வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குத் தெரிவுகளை கொள்வனவு செய்ய அனுமதிக்கும் ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்ட வகையில், முந்தைய வர்த்தமானியிலான திருத்தங்கள் குறித்து மத்திய வங்கியின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
அதற்கு மேலதிகமாக, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு 200,000 USD மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு 100,000 USD மீளப்பெறுவதற்கு தனிநபர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவர், இத்தகைய குறைந்த இடம்பெயர்வு கொடுப்பனவை பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கரிசனையை வெளியிட்டார்.
இந்த வரையறை காரணமாக தனிநபர்கள் ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற உத்தியோகபூர்வமற்ற வழிகளை நாடுவது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அத்துடன், Binance போன்ற பல்வேறு தளங்களின் ஊடாக இலங்கையர்கள் தமது ரூபாயை USDTக்கு (கிரிப்டோகரன்சி) மாற்றுவதும், பின்னர் வெளிநாடுகளுக்கு நிதி பரிமாற்றம் செய்வதும் அல்லது கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதுமான நிகழ்வுகள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரியுமா எனத் தலைவர் வினவினார். குறிப்பிடத்தக்க வகையில், கடந்த வாரம் அந்நியச்செலாவணி வர்த்தக நிதியங்களின் அனுமதியுடன் கிரிப்டோகரன்சி வகைகள் அண்மையில் அமெரிக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் ஒரு சொத்து வகுப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளித்த அதிகாரிகள், இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதுடன், இது குறித்து முழுமையான ஆய்வு நடத்த உறுதியளித்தனர். முறையான வழிகளுக்கு வெளியே ரூபாயை டொலராக மாற்றுவதுற்கு அனுமதியில்லை என்றும், நாண மாற்று மற்றும் முதலீட்டிற்காக அதிகாரப்பூர்வமற்ற வழிகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.