News

இந்நாட்டு ஆடைத் துறைக்கு புதிய வாய்ப்பு!

அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் நேற்று (19) உகண்டாவின் கம்பாலா நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதாவிற்கும் (Mariam Chabi Talata) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையில் 2012 இல் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடினர்.

மேலும், பருத்தி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள பெனின் குடியரசு, பருத்தித் தொழிலில் முதலீடு செய்வதற்கான இலங்கையின் ஆடைத் துறைக்கான வாய்ப்புகளை சுட்டிக்காட்டிய பெனின் உப ஜனாதிபதி, அதற்காக இலங்கை முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இரு நாடுகளின் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன் விசா பெறாமலேயே முப்பது (30) நாட்கள் வரை நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும் தங்கியிருப்பதற்கும் இந்த ஒப்பந்தம் மூலம் வசதிகள் வழங்கப்படுகின்றன.

இலங்கைக்கான வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் பெனின் குடியரசு சார்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் (Olushegun Adjadi Bakari ) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இலங்கை – பெனின் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய பரிமாணத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் உருவாக்கப்படக்கூடிய புதிய பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெனின் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட்க்கும் (Abiy Ahmed) இடையிலான சந்திப்பொன்றும் நேற்று இடம்பெற்றது.

இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவதற்கு வாழ்த்து தெரிவித்த எத்தியோப்பிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, விவசாயம் மற்றும் ஆடைத் தொழில்துறை உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதுடன் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button