இலங்கை, தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனையை அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்திருந்த நிலையில், அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்பினருக்கும் இடையில் இதுவரை 9சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்துடன், ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் கீழ் தற்போது இயங்கி வரும் தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள கறுவா திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் அனைத்து சொத்துக்கள் மற்றும் அதனால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் கறுவா அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தண்டனைச் சட்டக்கோவையில் வன்புணர்வுக் குற்றம் தொடர்பில் சட்டத்திருத்தம் செய்வதற்கும், சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆண் பிள்ளைகள் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தப்படுவது குற்றச்செயல் எனவும், அதனை தண்டணை சட்டக்கோவையில் அறிமுகப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.