ஹவுத்திகளின் தாக்குதல் தீவிரம் : சர்வதேசத்தில் அதிகரிக்கும் பதற்றம்!
ஏடன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த பிரிதானியாவிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலால் கப்பலின் சரக்கு கொள்கலன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, மேலும் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செங்கடலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்கள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதல் இது என்று வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
ஏடனில் இருந்து தென்கிழக்கே 60 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.
தம்மால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுத்தி அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா தெரிவித்துள்ளார்.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் உள்ள வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.