வருமானம் அதிகரித்தால் மாத்திரமே அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
வருமானம் அதிகரித்தால் மாத்திரம்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் வாங்கி அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தில் 3 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். நாட்டின் உற்பத்தி செயல்முறை 3 வீதமாக அதிகரிக்க வேண்டும். எனவே பொருளாதாரம் அதிகரிப்பது முக்கியமாகும்.
அதற்கான பின்னணியையே உருவாக்கிக் கொண்டு செல்கின்றோம். அதன் மூலமே மக்களால் ஏதாவது நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும்.
வருமானம் அதிகரித்தால் மாத்திரம்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். கடன் வாங்கி சம்பளத்தை அதிகரிக்க முடியாது. இதற்கு சிறிது காலம் எடுக்கும்.
பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்ட மட்டத்துக்கு வித்தியாசத்தை ஈடுகட்டுவதாயின், அரசின் வருமானம் அதிகரிக்க வேண்டும். அதனை ஒரேயடியாகச் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.