News

மார்ச் மாதத்திற்கு பிறகு குறைவடையவுள்ள எரிபொருள் விலை

ஐரோப்பாவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், எரிபொருள் பயன்பாடு அதிகமாக உள்ளதால் டிசம்பரில் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை, உலகில் எரிபொருள் விலை உயர்வு என்பது இயல்பான ஒன்று என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக தெரிவித்தார்.

இதேவேளை குளிர்காலம் முடிவடையும் நிலையில், மார்ச் மாதத்துக்குப் பிறகு எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கடினமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நாடு படிப்படியாக மீண்டு வரும் சூழ்நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். ஒரு காலத்தில் நாம் அனைவரும் எரிபொருள் வரிசையில் நின்றோம். அனைவரின் அர்ப்பணிப்புடன், நிலையான எரிபொருள் விநியோகத்தை பேண முடிந்துள்ளது.

அண்மைக்கால வரலாற்றில் தற்போது மிகப்பெரிய அளவிலான எரிபொருள் கையிருப்பு வைத்திருக்கிறோம். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் டொலர்களின் சேமிப்பையும் எம்மால் பேண முடிந்துள்ளது.

வலுசக்தித் தேவைக்காக, 200 மில்லியன் டொலர்கள் மேலதிக கையிருப்பு மற்றும் ஒரு வாரத்திற்கு அவசியமான டொலர்களை அதே வாரத்தில் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இன்றைய நிலவரப்படி, ஓட்டோ டீசல் மெட்ரிக் தொன் 130,791, பெட்ரோல் 92 ஒக்டென் மெட்ரிக் தொன் 83,275, சூப்பர் டீசல் மெட்ரிக் தொன் 8313, பெட்ரோல் 95 ஒக்டென் மெட்ரிக் தொன் 11,196,  விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் JET A1 மெட்ரிக் தொன் 17,274 மற்றும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் (FO) 75,410 மெட்ரிக் தொன் என்ற விதத்தில் (FO) பேணப்படுகிறது.

மேலும், டெண்டர் நடைமுறையின்படி, அடுத்த 06 மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

டிசம்பரில் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை, உலகில் எரிபொருள் விலை உயர்வு இயல்பான சூழ்நிலையாகிவிட்டது. இதற்குக் காரணம், ஐரோப்பாவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், எரிபொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது.

அந்தக் காலக்கட்டத்தில் கேள்வி அதிகரிப்புடன் ஒவ்வொரு ஆண்டும் விலை உயர்வு ஏற்படும் என்பதைக் கூற வேண்டும். அதன்படி, குளிர்காலம் முடிவடையும் நிலையில், மார்ச் மாதத்துக்குப் பிறகு எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பயனை வாடிக்கையாளருக்கு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும், 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் தாமதக் கட்டணம் செலுத்தவேண்டி ஏற்பட்டது.

ஆனால் 2023 இல், நாங்கள் ஒரு புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்தவுடன் அவற்றை களஞ்சியப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் எம்மிடம் உள்ள டொலர்களை செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்தோம். அந்த முறையின் மூலம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தாமதக் கட்டணமாக ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை.

மேலும், இதுவரை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழக்கமான முறைப்படி டெண்டர் முறையிலேயே எரிபொருள் கொள்வனவு செய்து வந்தது. ஆனால் எதிர்காலத்தில் டெண்டர்களை கோருவதற்கு ஏல விற்பனை முறையை அறிமுகப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதுவரை அதன் 95% பணிகளை எம்மால் நிறைவு செய்ய முடிந்துள்ளது. எரிபொருள் களஞ்சிய முனையம், நமக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை வழங்குகிறது. உலகில் நிலவும் புதிய தொழில்நுட்பங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் கட்டணத்தை மேலும் குறைக்க முடியும் என நாம் நம்புகிறோம்.

2022 இல் 22% ஆக இருந்த தவணை எண்ணிக்கையை 2023 ஆம் ஆண்டுக்குள் 05% முதல் 03 ஆக குறைக்க முடிந்தது. மேலும், 02 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் செயற்பாடுகளை (bunkering system) பொறிமுறை தொடங்கப்பட்டது.

இதன் மூலம் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் (FO) 5,200 மெற்றிக் தொன்களை கப்பல்களுக்கு விற்பனை செய்வதற்கும் 03 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடிந்துள்ளது.

மேலும், கப்பல்களுக்கு டீசல் நிரப்பும் பணி மிகக் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்படும்” என இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button