News

இந்திய – இலங்கை கூட்டாண்மை ஆரம்பம்!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், இலங்கையின் பொதுத்துறையின் திறனை அதிகரிக்க இந்திய – இலங்கை கூட்டாண்மை வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்தியா விஜயத்தின் போது, ​​இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை புதிய துறைகள் மூலம் வலுப்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். குறிப்பாக இரு நாட்டு மக்களிடையேயும் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது, ​​இந்தியா சிவில் சேவைகளின் திறனை கட்டியெழுப்ப ஒரு பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அரச துறையின் திறனை கட்டியெழுப்பும் இந்திய-இலங்கை கூட்டாண்மையானது இலங்கையில் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மிகவும் புதுமையான முறையிலும் செயற்திறனுடனும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வாய்ப்பளிக்கும்.

இந்த திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கான இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் போரில் இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கையின் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் முறை குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல்களின் பலனாக, இலங்கையில் இருந்து உயர்மட்டக் குழுவொன்று இந்தியாவுக்குச் சென்று, பொருத்தமான திறன் மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனங்களுடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இலங்கை முதலீட்டுச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உள்ளிட்ட 14 அரச அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழு பெப்ரவரி 12 முதல் 17 வரை இந்தியா நல்லாட்சி தேசிய மையத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். இந்திய அரசினால் இதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கையில் 12 அரச நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் டிஜிட்டல் கொள்முதல் உள்ளிட்ட அரசின் பிரதான சேவைகளுக்காக டிஜிட்டல்மயமாக்கலை செயற்படுத்தல், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் திறன் மேம்பாடு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், முதலீட்டு வசதிகள் அளித்தல் மற்றும் உணவுகளின் நடுநிலையான விலைப் பொறிமுறை ஆகிய பிரிவுகளுடன் தொடர்புள்ள நிறுவனங்களின் திறனை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

அரச சேவையின் மேம்பாட்டிற்கான அண்மைய முன் முயற்சிகள் மற்றும் பொருளாதார நலன் குறித்த இந்திய அரசு நிறுவனங்களால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட கொள்கை, நிறுவன மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளின் மூலம் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் அறிந்து கொள்ள இலங்கை பிரதிநிதிகள் குழு நடவடிக்கை எடுக்கும்.

மேலும், நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதோடு ​​இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அரச நிறுவனங்களின் திறனை அதிகரிக்கவும், சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனங்களுடன் நிறுவக்கூடிய நிறுவன ஒத்துழைப்புகளை அடையாளம் காணவும் பிரதிநிதிகள் குழு எதிர்பார்க்கிறது.

இலங்கைப் பிரதிநிதிகள் குழு கலந்துரையாடல்களிலும் பங்கேற்க இருப்பதோடு, ​​அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர், ஆளணி தொடர்பான இராஜாங்க அமைச்சர், மக்கள் குறைகேள் அமைச்சர், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் ஆகியோருடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button