புதிய கல்வி முறைமை குறித்து ஜனாதிபதி கூறியுள்ள விடயம்
நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (14.02.2024) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்தன. பாடசாலை பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க முடியவில்லை.
அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்த தலைவரும் முன்வரவில்லை. அப்போது, சவாலை ஏற்று, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தேன். இந்த பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்று வருகின்றது.
கல்வி மறுசீரமைப்பின் ஊடாக நாட்டில் புதிய கல்வி முறையொன்றை உருவாக்க வேண்டும். உலகிற்கு பொருத்தமான தொழில் படையினை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி முறையை உலகிற்கு பொருத்தமான வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
அதன் மூலம் உலகிற்கு தேவையான தொழில் படையினை உருவாக்க முடியும். அதனூடாக சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். பரீட்சைகளின் சுமைகளை குறைத்து ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்வாங்கி தொழில் முறைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.