இலங்கையில் முதல்முறையாக செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்ட எண்ணெய் கசிவு
வெளிநாட்டு நிறுவனமொன்றுக்குச் சொந்தமான கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக பிரான்ஸ் அரசின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக இலங்கையில் முதன்முறையாக செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் எண்ணெய் கசிவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பயணித்த 120 மீட்டர் நீளமான கொள்கலன் கப்பலில் இருந்தே இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள இலங்கை, எண்ணெய் கசிவுகள் மற்றும் சட்டவிரோத வெளியேற்றங்கள் காரணமாக சுற்றுச்சூழல் அபாயத்தை எதிர்நோக்குகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் தான் பிரான்ஸ் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட எண்ணெய் மாசுபாட்டைக் கண்டறிதல் மற்றும் விண்வெளியில் இருந்து மாசுபடுத்துபவர்களை அடையாளம் காண்பதற்கான செயற்கைக் கோள் சேவையை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
இதனை இலங்கை அரசாங்கம் அண்மையில் “CLS” என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது,இந்த செயற்கைக்கோள் கண்காணிப்பு சேவை மூலமே எண்ணெய் கசிவு மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, கப்பலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரை கப்பல் தடுத்து வைக்க உத்தரவிட்டு 15 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.