News

200 பிரதேச செயலாளர்கள் பதவியை இழக்கும் அபாயம் : வெளியான அதிர்ச்சி தகவல்

நாடளாவிய ரீதியில் பணியாற்றும் 341 பிரதேச செயலாளர்களில் 200க்கும் மேற்பட்டோர் எதிர்காலத்தில் பதவிகளை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச சேவை ஆணைக்குழுவின் அண்மைய பரிந்துரையின் பிரகாரம் அரச நிர்வாக சேவையின் II மற்றும் III தரங்களைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

இதன்படி, அரச நிர்வாக சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்களே பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்படுவதாகவும், தரம் 2 மற்றும் 3 அதிகாரிகள் வகிக்கும் பிரதேச செயலாளர் பதவிகள் வெற்றிடம் ஏற்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த புதிய நியமனங்கள் நேர்முகத்தேர்வின் பின்னரே வழங்கப்படும் எனவும், நியமனங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகங்களில் முதல் தர உத்தியோகத்தர்கள் மூவர் மாத்திரமே உள்ளதாகவும், ஏனைய 13 பிரதேச செயலாளர்கள் இரண்டாம் தர உத்தியோகத்தர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இம்முறையில் பிரதேச செயலாளர்களாக பதவி வகித்த கீழ்மட்ட அதிகாரிகள் வேறு பணிக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும், அந்த அதிகாரிகள் எவ்வளவு திறமையாக இருந்தாலும்,பொது சேவை ஆணையகத்தின் சிபாரிசுக்கு பணிந்தே ஆக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் அரச நிர்வாக சேவையில் தரம் 2 மற்றும் 3 அதிகாரிகள் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அரச சேவைகள் ஆணைக்குழுவின் இந்தப் புதிய பரிந்துரைகள் நடைமுறையில் இல்லை என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக இந்த அதிகாரிகளுக்கு வேறு பதவிகளை வழங்குவதற்காக மீண்டும் மீண்டும் வர்த்தமானி வெளியிடப்படுவதாகவும், வர்த்தமானியை வெளியிடுவதைத் தவிர வேறு வேலைகளை செய்வதற்கு நேரம் கிடைக்காது எனவும் பிரியந்த தெரிவித்தார்.

இதனால் உருவாகியுள்ள புதிய நிலைமை குறித்து பிரதேச செயலாளர்கள் அரசியல் அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துள்ளதாகவும், இது தவிர்க்க முடியாத உண்மை எனவும் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்கள் தரவரிசை அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button