News

ஆசிரியர் ஆட்சேர்ப்பு! மார்ச்சில் பரீட்சை!

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்: 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பாடப்புத்தகங்கள் யாவும் விநியோகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளன.

மார்ச் முதலாம் திகதியாகும் போது பாடசாலைகளில் விநியோகப் பணிகள் நிறைவு செய்யப்படும்.

இதற்காக  12,000 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அத்துடன் சீன அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் பாடசாலை மாணவர்களின் சீருடைக்குத் தேவையான துணியில் 80%, அதாவது 05 பில்லியன் ரூபா பெறுமதியான சீருடைத்துணிகள் எமக்கு கிடைத்துள்ளன.

அவை விநியோகம்  செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டுக்கான பாடசாலை கால அட்டவணை தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் சுற்றறிக்கை மூலம் பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படும். மேலும், பாடசாலை செல்லாத பிள்ளைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, குழந்தைகளின் பிறப்பு வீதம்  குறைவதால் பாடசாலைக்குச்  சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் குறைகிறது. இது 0.17% என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் 10 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பை நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும். 20,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சேவையை விட்டுச் சென்ற மற்றும்  வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் காரணமாக மாகாண மட்டத்தில் 13,500 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஆட்சேர்ப்பு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால், விரைவில் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும்.

இது தவிர, ஆசிரியர் சேவை யாப்பின் படி, விஞ்ஞானம்  மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது  தொடர்பான பரீட்சை  மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு, மார்ச் இறுதிக்குள் ஆள்சேர்ப்பு நடைபெறும்.

அத்துடன் பாடசாலை மதிய உணவுக்காக 16 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் USAID நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்காக பெறுபேறுகள் வெளியாகும் வரை நாட்டிலுள்ள 300 நிலையங்களை உள்ளடக்கி பிற்பகல் 02.00 முதல் 04.30 வரை தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல் பாடநெறிகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக  ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு  மைக்ரோசொப்ட்  நிறுவனம் ஆதரவு அளிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button