கொரோனா தடுப்பூசியால் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
சில கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய இதயம், மூளை மற்றும் இரத்தக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இலங்கையில் உள்ள மருத்துவ நிபுணர்கள் சுகாதார அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான உலகளாவிய தடுப்பூசி தரவு வலையமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பைஸர், மோடெர்னா, மற்றும் அஸ்ட்ராஸினெகா போன்ற நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இதயம், மூளை மற்றும் குருதி கோளாறுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் தீவிரத்தன்மை குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
ஆய்வின் கண்டுபிடிப்புகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இலங்கை விழிப்புடன் இருப்பது நல்லது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இது எட்டு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்ட 99 மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டது எனவும் இந்த ஆய்வு இன்றுவரை கொரோனா தடுப்பூசி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிகப்பெரிய ஆய்வு என்றும் கூறப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டிற்குள் கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுவது தொடர்பாக இலங்கை தொடர்ந்தும் விழிப்புணர்வையும் அவதானிப்பையும் பேணுவது இன்றியமையாதது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், ஆய்வின் கண்டுபிடிப்புகளை இலங்கைக்கு நேரடியாகப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தரவுகள் இலங்கை சூழலில் இருந்து வேறுபடுவது மாத்திரமன்றி, மரபணு வடிவங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வடிவங்கள் போன்ற காரணிகளும் இதில் கணிசமான அளவு பங்களிப்பை கொண்டுள்ளன, என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எது எவ்வாறாயினும், சுகாதார அமைச்சு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய, அதே நேரத்தில் உள்ளூர் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் விஜேசிங்க இதன்போது தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், கொரோனா தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் குறித்து நாட்டில் நிரூபிக்கப்பட்ட ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை என்று இலங்கையின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.