News

அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வேண்டும் – சஜித் பிரேமதாச

மத்திய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பைப் போலவே அரச ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை நிலவி வரும் நிலையில், இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிய விரும்புகிறோம்.

இவ்வாறான தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாத வகையில் மத்திய வங்கி சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் செயற்படுகிறதா என்பதை அறிய விரும்புகின்றோம்.

கடந்த காலங்களில் அரச சேவையில் உள்ள தொழில் வல்லுநர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மட்டுமே அந்த நிவாரணம் கிடைத்துள்ளது.

அரச சேவையில் தொழில்சார் பொறுப்புகளை வகிக்கும் தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களின் சம்பளம் எப்போது அதிகரிக்கப்படும்? அரச ஊழியர்களும் சம்பள அதிகரிப்பு கோரிய போதும் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள கொடுப்பனவை இவ்வாறு அதிகரிக்க அனுமதித்துள்ள முன்னுதாரணத்தில் முழு அரச ஊழியர்களுக்கும் இவ்வாறே சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலைக்குக் காரணமானவர்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு நாட்டின் முக்கிய நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பான மத்திய வங்கியின் நிதிச் சபையில் உள்ளவர்களே இதற்கு நேரடிப் பொறுப்பாளிகள் எனக் கண்டறியப்பட்ட போதிலும், வங்குரோத்து நிலையிலிருந்து மீளப் போராடி வரும் நாட்டில் இவ்வாறு சம்பளத்தை அதிகரிப்பதற்கு தார்மீக உரிமை உள்ளதா என்று கேள்வி எழுகிறது.

நாடு வங்குரோத்தாவதற்கு காரணமான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் டபிள்யூ. டி. லக்ஷ்மன் போன்றோருக்கும் இந்த சம்பளம் அதிகரிக்கப்படுமா? சம்பள அதிகரிப்புக்கு காரணம் பணவீக்கம் மற்றும் மூளைசாலிகள் வெளியேற்றம் என்று கூறப்படுவதால், மூளைசாலிகள் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான ஒரே வழிமுறையாக இந்த முறையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதையே இது காட்டுகிறது.

இந்த செயல்முறை தொடர்பாக அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை அறிந்து கொள்வது அவசியம். மக்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகி அரச சேவையில் பல வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வேளையில், இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திற்கு அவசியம் பரேட்டே சட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், சகல வர்த்தக வங்கிகளும் போட்டி போட்டு ஏலத்தை நடத்தி வரும் வேளையில் மத்திய வங்கி நிர்வாகம் சம்பள கொடுப்பனவுகளை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பை மீளப்பெற அரசாங்கம் தலையிட வேண்டும்.மத்திய வங்கி ஆளுநரை நாட்டை வங்குரோத்தாக்கிய அரசாங்கமே நியமித்துள்ளதால் அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனைய அரச நிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தங்களை அங்கீகரிப்பதில்லை என திறைசேரி தீர்மானித்திருக்கும் வேளையில் இந்த சம்பள அதிகரிப்பு கூட்டு ஒப்பந்தம் மூலமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளாத கூறி நியாயப்படுத்தப்படுகிறது. இது சட்டபூர்வமானது அல்ல, இங்கு எந்த தார்மீகமும் இல்லை.

இவ்வாறான இரட்டைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டாலும், அந்த வரம்பை அவர்கள் மீறவில்லை.

தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு நடந்துகொள்ளும் போது, மத்திய வங்கியும் அதன் நிர்வாகமும் அவ்வாறு நடந்துகொள்வது நெறிமுறையல்ல.

மத்திய வங்கியின் சுயாதீனம் அரசியல் தலையீடுகளை தவிர்ப்பதற்கே கொண்டுவரப்பட்ட போதிலும், வங்குரோத்து நிலையிலும் தமக்கு கிடைத்த சுயாதீனத்தைப் பயன்படுத்தி சம்பளத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர் என குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button