ஐ.எம்.எப் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய இலங்கை : வெளியான தகவல்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுள் 33 வீதமானவற்றை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளதாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் நிர்வாகத்தை மேம்படுத்துவது தொடர்பான அதிகளவான நிபந்தனைகள் கடந்த பெப்ரவரி மாதத்தின் இறுதிவரை நிறைவேற்றப்படவில்லை என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தவறான நிர்வாகமே காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியது.
இந்த நிலையில், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடனுதவி கடந்த டிசம்பர் மாதம் கிடைக்கப் பெற்ற நிலையில், நிதியத்தின் 45 நிபந்தனைகள் கடந்த பெப்ரவரி மாதத்துக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதற்கமைய, இலங்கைக்கான கடனுதவி தொடர்பான நிதியத்தின் நிபந்தனைகளில் 36 வீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சுமார் 31 வீதமான நிபந்தனைகளை இதுவரை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.