சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது விவாதம் நடத்த நாடாளுமன்ற அலுவல்கள் குழு முடிவு செய்துள்ளது.
இன்று (14) நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சபாநாயகருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதியன்று மாலை 04.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டன.
உச்சநீதிமன்ற நிபந்தனைகளை மீறி நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்ததற்காகவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.