News

இலங்கையில் திறக்கப்படவுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை

தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேர்மன் இலங்கை நட்புறவு புதிய மகளிர் வைத்தியசாலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாளை மறுதினம் (27) திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆறு மாடிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் அறுநூறு படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் உள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் பி.விமலசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக ஜேர்மன் அரசாங்கம் வழங்கிய கடன் உதவித் தொகை இருபத்தைந்து மில்லியன் யூரோக்கள்(ரூபா 357 கோடி) ஆரம்பத்தில் வைத்தியசாலை நிர்மாணத்திற்காக எண்ணூறு பேர்ச்சஸ் பெறப்பட்டுள்ளது.

பின்னர் மேலும் இரண்டு காணிகள் கிடைத்ததால் வைத்தியசாலையின் தற்போதைய அளவு ஆயிரம் பேர்ச்சஸை அண்மித்துள்ளது. மேலும் வைத்தியசாலை திறக்கப்பட்டதன் பின்னர் கராப்பிட்டிய புறநகர் அபிவிருத்தியை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஹெல்முட் கோல் 2004 டிசம்பரில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனையான காலி மஹாமோதர வைத்தியசாலையின் சேதத்தைப் பார்த்து நன்கொடையாக வழங்கிய 300 கோடி ரூபாயில் இந்த வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி 2007ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இந்த புதிய வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டினார் ஆனால் அதனை நிர்மாணிக்கும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம் அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டு இலங்கையை விட்டு வெளியேறியது.

இந்நிலையில் அப்பகுதியில் பின்னர் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இடமாக மாறியதுடன் ஹெல்முட் கோல் நன்கொடையாக வழங்கிய தொகை குறித்து எந்த தகவலும் இல்லை.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் தலையீட்டினால் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டதுடன் அதற்காக ஜேர்மனியிடம் இருந்து இருபத்தைந்து மில்லியன் யூரோக்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் 2015 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டன.

அத்தோடு புதிய மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு மஹமோதர மகப்பேறு மருத்துவமனை அந்த இடத்திலிருந்து அகற்றப்படவுள்ளமை குறி்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button