News

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படாது : நீதியமைச்சர் உறுதி

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஊழலை கட்டுப்படுத்துவதற்கும் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே திருத்தங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்  ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்

‘நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியமான ஜனநாயக அம்சமாகும். தேர்தல் திருத்த சட்ட மூலமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1994 இல் சந்திரிக்கா அதிபர் வேட்பாளராக மூன்று தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். அது நிறைவேற்றதிகாரம் உடைய அதிபர் முறைமையை ஒழிப்பது, ஊழலைக் கட்டுப்படுத்துவது மற்றும் விகிதாசார வாக்களிப்பு முறையை நீக்குவது. ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கு பொறுப்பான உறுப்பினர்களை தெரிவு செய்யவும் அங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தப்பட்ட போதிலும், தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்தது.

அதுவரை, அதிபர் ஒரு கொலை செய்திருந்தாலும், அவர் மீது வழக்குத் தொடர முடியாமல் இருந்தது. ஆனால் 19ஆவது திருத்தம் அந்த நிலையை மாற்றியது. அதன்படி இதுவரை நான்கு அதிபர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994 ஆம் ஆண்டு முதல் அதிபர் தேர்தலின் போது ஒவ்வொரு தலைவர்களும் இது தொடர்பாக வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை அந்த தலைவர்கள் யாரும் நிறைவேற்றவில்லை.

ஆனால் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இந்த ஆண்டு விகிதாசார தேர்தல் முறை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தும் வகையில் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் தேர்தல் முறைகளில், தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொகுதி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் செனட் சபை முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் திறமையானவர்களைக் காட்டிலும் பிரபலமானவர்கள்தான் அதிகமாக நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். ஆனால் செனட் சபை முறையின் ஊடாக பிரபலமில்லாத திறமையானவர்களை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கலாம்.

இதுவரையில் முன்வைக்கப்பட்ட தேர்தல் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் இருப்பதாக சமூகத்தில் சில பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தத் திருத்தங்கள் மூலம் தேர்தலை ஒத்திவைக்க எதிர்பார்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன் போது எந்தவொரு வேட்பாளரும் இந்த தேர்தல் திருத்தம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும் இது தொடர்பாக தமது முடிவை எடுக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button