News

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த UK!

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05 முதல் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.

அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் ஆகிய பகுதிகளில் முந்தைய தகவல்களைப் புதுப்பித்துள்ளது. அதன்படி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு குறித்து முந்தைய ஆலோசனையில் இருந்த தகவல்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இது தவிர, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை போன்ற சுகாதார சேவைகளில் உள்ள சவால்களும் நீக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தெளிவான புரிதலை ஏற்படுத்துவதற்காக, முன்னைய சுற்றுலா ஆலோசனையின் மூலம் வழங்கப்பட்ட இந்த எதிர்மறையான தகவல்களை நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதுடன், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பிரித்தானிய அதிகாரிகளிடம் அவ்வப்போது விடயங்களை முன்வைத்தது.

ஜனவரி 01 மற்றும் மார்ச் 27 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 53,928 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், இதன் மூலம் ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட சுற்றுலா ஆலோசனையானது இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் உத்வேகத்தை வழங்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button