News

இலங்கையின் விவசாயத் துறைக்கு அமெரிக்கா உதவி!

இலங்கையின் விவசாயத் துறைக்கு அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) வழங்கும் உதவிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரான அலெக்சிஸ் டெய்லர், அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்தனர்.

அதிகரித்த உணவுப் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிரான மீண்டெழும் தன்மையினை அதிகரித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு இலங்கையின் விவசாய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்வதில் அமெரிக்க மக்கள் வௌிப்படுத்திக் கொண்டிருக்கும் தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை துணைச் செயலாளர் டெய்லரின் விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் ஊடாக உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிரான மீண்டெழும் தன்மையினை மேம்படுத்துதல் ஆகியவிடயங்களில் கவனம் செலுத்தும் 2024 Food for Progress எனும் முன்முயற்சியில் ஒரு முன்னுரிமை நாடாக இலங்கை வகிக்கும் முக்கிய பங்கினை வௌ்ளிக்கிழமை துணைச் செயலாளர் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் உறுதிப்படுத்தின.

இதன்போது இலங்கையில் 15,000 இற்கும் மேற்பட்ட பாற்பண்ணையாளர்களுக்கு அவர்களது பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவிசெய்த 27.5 மில்லியன் டொலர் பெறுமதியுடைய Market-Oriented Dairy எனும் செயற்திட்டம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

தேவையற்ற எரிசக்தி நுகர்வினைக் குறைக்கும் விதத்திலான கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன நுகர்வு உத்திகள் தொடர்பாக விரிவான பயிற்சியினை வழங்குவதன் மூலம் பாற்பண்ணையாளர்கள் காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கமடைவதை மேம்படுத்துவது USDA இன் பாற்பண்ணை செயற்திட்டத்தின் இலக்காகும்.

அதற்கு மேலதிகமாக, கல்வி அமைச்சின் பங்காண்மையுடன் சேவ் த சில்ட்ரன் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் USDA இன் McGovern-Dole செயற்றிட்டமானது 2018 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலுமுள்ள கிட்டத்தட்ட 100,000 ஆரம்பப் பாடசாலைச் சிறார்களுக்கு நாளாந்த உணவை வழங்கியுள்ளது. இந்த வெற்றியின் தொடராக பதுளை, கொழும்பு, கிளிநொச்சி, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பாடசாலைகளில் உணவு வழங்கும் ஏற்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்காக 32.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஒரு புதிய ஐந்தாண்டு செயற்திட்ட விரிவாக்க நடவடிக்கையில் USDA ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 200,000 மாணவர்களுக்கு உணவு வழங்குவது இச்செயற்திட்டத்தின் தற்போதைய இலக்காகும்.

ஸ்திரத்தன்மை மற்றும் சௌபாக்கியம் ஆகியவற்றைப் பேணிவளர்ப்பதற்கான எமது பரந்த இலக்கின் ஒரு பகுதியாக USDAஇன் உதவிகள் ஊடாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. விவசாய பங்காண்மைகளில் முதலீடு செய்வதன் மூலம், உள்ளூர் விவசாயிகளை
வலுவூட்டுவதற்கும், உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மற்றும் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கும் நாம் எதிர்பார்க்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button