News

பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ரணில்

ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஈடுபட்டுள்ளார்.

இதன் முதல் நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறுவுநர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை நேற்றுமுன்தினம் (24) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena)  கலந்து கொண்டுள்ளார்.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் (UNP) பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக மே தினப் பேரணிகளை நடத்துவது எனவும், ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஒத்த கருத்துடைய ஏனைய கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணியை உருவாக்குவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் புதிய அரசியல் கூட்டணி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இந்தச் சந்திப்பில் ஒரு தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து அனைத்து கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சின்னத்தில் புதிய கூட்டணியைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடனை இலங்கை பெற்ற பின்னர் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும மற்றும் பிவித்துரு ஹெல உறுமய தலைமையிலான அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுவதற்கு மேற்படி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button