அதிபர் ரணிலின் வடக்கு விஜயம் குறித்து வெளியான அறிவிப்பு.
ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை (24) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
3 நாட்கள் விஜயமாக வடக்கிற்கு புறப்படும் அதிபர் ரணில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.
இதேவேளை வடக்கில் உள்ள இளைஞர்களுடன் அதிபர் விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயிற்சிப் பிரிவொன்றையும் அதிபர் திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதார பிரிவொன்றும் அதிபர் ரணிலால் திறந்து வைக்கப்படவுள்ளது.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இதய நோய் பிரிவும், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிய விடுதியொன்றும் அதிபரால் திறந்து வைக்கப்படவுள்ளன.
இவை தவிர யாழ்ப்பாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலும் அதிபர் பங்கேற்கவுள்ளார்.
இவ்வாறாக 10 முக்கிய நிகழ்வுகளில் அதிபர் கலந்து கொள்ளவுள்ளார்.
அது மாத்திரமின்றி வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இவ்விஜயத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
எனினும் அரசியல் ரீதியான சந்திப்புக்கள் எவையும் திட்டமிடப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.