News

பல்கலைக்கழக ஊழியர்களைப் பணிக்குத் திரும்புமாறு அழைப்பு

நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இம்மாதம் இரண்டாம் திகதி முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாக உத்தயோகத்தர்கள் மற்றும் போதனைசாராப் பணியாளர்களை உடனடியாகப் பணிக்குத் திரும்பப் பணித்து அந்தந்தத் தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும், பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் போதனைசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் பல இணைந்து தங்களது சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 27 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய இது தொடர்பாக பல அமைச்சரவைப் பத்திரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு கல்வி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் தொடர்சியாக ஆராய்ந்த அமைச்சரவை, நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்றை அமைப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம் உங்களுக்குப் பொருத்தமான தீர்வு கிட்டும் என நம்பப்படுகிறது. தொழிற்சங்கப் போராட்டத்தினால் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதில் பல இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாட்டின் நற்பிரஜைகளாக உங்கள் பொறுப்புணர்ந்து செயற்பட்டு, பல்கலைக் கழகங்கள் இடையூறின்றி இயங்குவதற்காக உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் – என்றுள்ளது.

இதேவேளை, தங்களுடைய கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தாம் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இனிவரும் காலங்களில் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த உள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு நேற்றிரவு(29) அறிவித்திருந்தது.

எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் பணிப்புரை பற்றி ஆராய்வதற்காக அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் பிரதிநிதிகள் இன்று(30) வியாழக்கிழமை இரவு நிகழ்நிலையில் கூடவிருக்கின்றமை குறிப்பி்டத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button