தொடரும் பணிப்புறக்கணிப்பு – 20 அலுவலக ரயில் சேவைகள் இரத்து
ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 06ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 05 தொழிற்சங்கங்களுக்கு இன்று தமது பிரச்சினைகளை முன்வைக்க கலந்துரையாடல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன “அத தெரண” வினவிய போது குறிப்பிட்டார்.
அதன்படி இன்று நண்பகல் 12.00 மணிக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சில் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது வரையில் அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறும் என தமக்கு தெரியாது என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க “அத தெரண” வினவிய போது குறிப்பிட்டார்.
ரயில் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தவிடம் வினவியபோது, குற கலந்துரையாடல் தொடர்பில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று காலை 47 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரதான மார்க்கத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 11 ரயில் சேவைகளும், சிலாபம் மற்றும் வடக்கு மார்க்கத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு பயணிக்கும் தலா 04 ரயில் சேவைகளும் , கரையோர மார்க்கத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு பயணிக்கும் 18 ரயில் சேவைகளும், களனிவெளி மார்க்கத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 03 ரயில் சேவைகளும் இன்றைய தினம் இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் 07 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாகவும், நீண்ட தூர ரயில் சேவைகள் வழமை போன்று இயங்கும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்று காலை 20 அலுவலக ரயில் சேவைகள் இயங்காது என லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.