News

முதியோர்கள் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் (Sri Lanka) முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் பிறக்கும் போதே ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால (Palitha Mahipala) குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “எமது நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நம் நாட்டில் பிறக்கும் போது சராசரி ஆயுட்காலம் 79.7% ஆகும்.

புதிய மதிப்பீட்டின்படி பெண்களுக்கு 83 வயதாக அதிகரித்துள்ளது. இதனால், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நமக்குள்ள இன்னொரு பிரச்சினையாகும்.

எனவே, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து மாகாண சபை வைத்தியசாலைகளையும் உட்படுத்தி இதற்காக சுமார் 70 பில்லியன் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நோய் கட்டுப்பாடு பலப்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ப, தொற்றுநோயியல் பிரிவு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். புதிய திட்டத்தின் கீழ் அதைச் செய்து வருகிறோம்” என தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம (Ananda Wijewickrama), நாட்டில் ஏற்பட்டிருந்த மருந்து தட்டுப்பாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button