News

புதிதாக 75,000 வேலை வாய்ப்புகள்!

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக 1000 ஏக்கர் பரப்பளவில் பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று (12) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் புதிய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் புதிய முதலீடுகளை ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பிங்கிரிய ஏற்றமதி வலயம் முழுமைபடுத்தப்பட்டதன் பின்னர் 2600 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள எதிர்பார்ப்பதோடு, 75,000 புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளது.

இதன்போது பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் நிர்மாண பணிகளை முன்னெடுக்கும் Dongxia Industrial & Commerce Co.Ltd. நிறுவனத்தின் அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நிறுவன வளாகத்தை மேற்பார்வை செய்ததோடு, ஊழியர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலீட்டுச் சபையின் அதிகாரிகள், நகர அபிவிருத்தி சபையின் அதிகாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் உரிமையாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றதோடு, இந்த செயலாக்க வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் பின்னர் பிங்கிரிய, தும்முல்லசூரிய, மாதம்பை உள்ளிட்ட பிரதேசங்களை மாநகர தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுரை விடுத்தார்.

விவசாயம், உற்பத்தித் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி உள்ளிட்ட ஐந்து துறைகளின் கீழ் பிங்கிரியவை பொருளாதார வலயமாக மாற்றுவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“டொங்ஷியா நிறுவனம் 2018 இலங்கையில் வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்தது. வங்குரோத்து அடைந்த பின்னரும் நாட்டிலிருந்து புதிய தொழிற்சாலையை ஆரம்பித்துள்ளது. அதனால் 400 பேருக்கு வேலைவாய்பை வழங்க முடிந்துள்ளது. இந்த தொழிற்சாலை இளையோருக்கு சிறந்த எதிர்காலத்தை தோற்றுவிக்கும். நாட்டில் இதுபோன்ற பல தொழிற்சாலைகள் உருவாக வேண்டும்.

பிங்கிரிய பிரதேசத்தை முதலீட்டு வலயமாக அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்காகவே 2018 ஆம் ஆண்டில் பிங்கிரிய பொருளாதார வலயத்தை ஆரம்பித்தோம். இன்று மேலும் 1000 ஏக்கர்களை இந்த வலயத்தோடு இணைத்திருக்கிறோம்.

நாம் மிகக் கஷ்டமான காலத்தை கடந்து வந்திருக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையில் நாட்டை ஏற்றுக்கொள்ள எவரும் வரவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கொண்டிருந்த கட்சிக்கு ஜனாதிபதி பதவியை வழங்க வேண்டிய நிலைமை வந்தது. உலகில் எங்கும் அவ்வாறு நடந்ததில்லை. இன்றளவில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வந்திருக்கிறது.

கடன் மறுசீரமைப்பினால் மீளச் செலுத்த வேண்டியிருந்த கடன் தொகையில் 8 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைத்திருக்கிறது. கடன் செலுத்துவதற்கான காலத்தையும் 2043 வரையில் நீடித்துள்ளோம். அதனால் நாட்டின் பொருளாதாரம் மூச்சு விடும் நிலைமையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையலாம். எமது ஏற்றுமதி வருமானத்தைவிட இறக்குமதி செலவு அதிகமாக உள்ளது. இவ்வாறு முன்னோக்கிச் சென்றால் இன்னும் பதினைந்து வருடங்களில் மீண்டும் வங்குரோத்து நிலைவரும்.

அதனால் வௌிநாட்டு கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையை பேண வேண்டும். வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுமதி பொருளாதாரத்தினால் முன்னேறியுள்ளன. இலங்கை இன்னும் ஒரே இடத்தில் நிற்கிறது.

அதனால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாதுகாத்துகொண்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று திறக்கப்பட்ட பொருளாதார வலயம் ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தித் துறைகள், சுற்றுலா, தொழில்நுட்பம், நவீன விவசாயம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்த முடியும். அதற்குத் தேவையான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளது. இந்த வேலைத் திட்டங்களைப் பாதுகாப்பதால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.

ஏற்றுமதி துறையை ஊக்குவிப்பதற்கான 2018 ஆம் ஆண்டில் பிங்கிரிய ஏற்றுமதி வலயம் உருவாக்கப்பட்டது. அதனால் குளியாபிட்டிய, தும்முல்லசூரிய, மாதம்பை, பிங்கிரிய, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த பொருளாதார வலயத்தை முழுமைப்படுத்தும் பட்சத்தில் 75,000 தொழில் வாய்ப்புக்களும் உருவாகும்.

அதேபோல் இரணவில, பிங்கிரிய, சிலாபம் வரையில் சுற்றுலா வலயமொன்றும் அமைக்கப்படவுள்ளது. இரணவில பிரதேசத்தில் கோல்ப் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதேபோல் IT வலயமொன்றைக் கட்டமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிலாபம் பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களை நவீன விவசாயத்துக்காக பயன்படுத்திகொள்ள எதிர்பார்க்கிறோம்.

இந்த ஏற்றுமதி வலயம் மேம்படுத்தப்பட்ட பின்னர் புதிய வீடுகள், நகரங்கள் மற்றும் பிரதேச மக்களுக்கான வியாபார வாய்ப்புக்களும் உருவாகும்.

அதன்படி விவசாயம், தொழில்துறை, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வர்த்தகம், மீன்பிடித்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதன் ஊடாக பிங்கிரியவை இந்நாட்டின் பிரதான பொருளாதார வலயமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பதோடு, இதற்கு இணையாக பன்னல, குளியாபிட்டிய பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தி ஏற்படும். இதனால் மாதம்பை பகுதியில் முற்காலத்தில் காணப்பட்ட செழிப்பை மீண்டும் ஏற்படுத்த முடியும்.

இந்த அனைத்து வேலைத்திட்டங்களும் நாட்டின் முன்னேற்றத்துக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாம் இப்போது கஷ்டமான காலத்தை கடந்து வந்திருக்கிறோம். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறோம். மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க சரியான பொருளாதார முறையுடன் பயணிக்க வேண்டும்.

அதனை சாத்தியமாக்கிக் கொள்ள நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த மாற்றத்துக்கான சிறப்பிடமாக பிங்கிரியவை குறிப்பிடலாம். பிங்கிரிய, இரணவில உள்ளிட்ட பகுதிகளில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். நீங்கள் அனைவரும் அதன் பங்குதாரர்கள் ஆக வேண்டும்.” என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக , 2018 ஆம் ஆண்டு பிங்கிரிய ஏற்றுமதி வர்த்தக வலயத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். இன்று அந்த வலயத்தின் முதல் தொழிற்சாலை திறக்கப்பட்டது. மேலும், அந்த வலயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்திற்காக மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் இன்று வழங்கப்பட்டது. புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கு ஜனாதிபதி எமக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இரணவில, மாங்குளம், காங்கேசந்துறை பிரதேசங்களில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட சரியான பொருளாதார வேலைத் திட்டத்தின் காரணமாக இவ்வருடம் 35 முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடிந்தது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுக்கு நிதியமைச்சு, வழங்கிய ஒரு பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெறுவதற்கான இலக்கும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாவாற நல்ல பொருளாதார அறிகுறிகள் இலங்கையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை காண்பிக்கின்றன.” என்று தெரிவித்தார்.

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, அசோக பிரியந்த, டி.பி. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, சுமித் உடுகும்புர, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன், முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன், டொங்ஷியா இன்டஸ்டிிரியல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷோ விங் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button