News

சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

இலங்கையில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அட்டை முறையிலான சாரதி அனுமதிப் பத்திர முறைமையை, இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப் பத்திர அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா (Surangi Perera) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாட்டின் எப்பகுதியிலிருந்தும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,  சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தல், காணாமல் போன சாரதி அனுமதிப் பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை எதிர்காலத்தில் இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அந்த நடவடிக்கைகள் பரீட்சார்த்த மட்டத்தில் உள்ளது. இதன் ஊடாக, காலத்தையும் பணத்தையும் மீதப்படுத்த முடியும்.

புதிய சாரதி அனுமதிப் பத்திர முறையின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திர அட்டை விநியோகிக்கப்படாது, இதற்கு மாறாக கையடக்கத் தொலைபேசிகளிலேயே இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்த முடியும்.

விசேட செயலி (APP) மூலம் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பார்வையிட முடிவதுடன் எதிர்காலத்தில் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான அட்டைகள் விநியோகிக்கப்படாமையினால், பாரிய அந்நிய செலாவணியை இலங்கைக்கு சேமித்துக்கொள்ள முடியும்.

சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடுவதற்கான அட்டைகள் வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்யப்படுவதுடன், இலத்திரனியல் முறைமையின் ஊடாக அந்த நடவடிக்கையை தவிர்த்துக்கொள்ள முடியும்.

ஆண்டொன்றிற்கு 9 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சாரதி அனுமதிப் பத்திரத்தை அச்சிடும் நடவடிக்கைகள் இராணுவம் வசமானது.

இராணுவத்திடமிருந்து மீள அதனை தாம் பெற்றுக்கொள்ளும் போது சுமார் 10 இலட்சம் வரையான சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடவேண்டிய கட்டாயம் காணப்பட்டது. இதற்காக 24 மணிநேர அச்சிடும் சேவையை ஆரம்பித்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், விநியோகிக்கப்படவுள்ள 10 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்களில் தற்போது 2 இலட்சம் வரை மாத்திரமே அச்சிட வேண்டியுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இந்த எஞ்சிய அச்சிடும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும், அதற்கு பின்னர் வழமை போன்று தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

மேலும், தற்போது ஒரு நாளில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.“ என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button