இலங்கையில் இருந்து அதிகளவான தாதியர்களை நியமிக்க சிங்கப்பூர் முயற்சி
இலங்கையில் இருந்து அதிகளவான தாதியர்களை நியமிக்க சிங்கப்பூர் (Singapore) எதிர்பார்த்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் செனரத் திசாநாயக்கவுடன் அண்மையில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது, சிங்கப்பூர் சுகாதார அமைச்சர், சிங்ஹெல்த்தை இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைக்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கையில் கூட்டுத் திட்டங்கள சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் இலங்கையின் சுகாதார நிபுணர்களுக்கான திறனை வளர்ப்பதற்கான முயற்சிகளை ஏற்பாடு செய்வது குறித்து இலங்கை சுகாதார அமைச்சுடன் மேலதிக கலந்துரையாடல்களையும் அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங்குடன் இலங்கை உயர்ஸ்தானிகர் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
தொற்றுநோய்க்கான இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புப் பதிலை வலுப்படுத்துவதில் சிங்கப்பூரின் உதவிக்கு உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்ததாக சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தாதியர் ஆட்சேர்ப்புத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஏறத்தாழ 400 இலங்கை தாதியர்கள் சிங்கப்பூர் பொது சுகாதாரத் துறையில் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதாக உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்ய இந்த வாய்ப்பைமேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.