உருமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகள் இடைநிறுத்தம்
உருமய அல்லத உரித்து என்னும் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுகளை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் இந்த திட்டத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்பு செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகளுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உருமய, அஸ்வெசும போன்ற நிகழ்ச்சித் திட்டங்களின் போது அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்யக்கூடிய வகையிலான எந்தவொரு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குதல், காணி வழங்குதல், வீடுகள் வழங்குதல், அரிசி உள்ளிட்ட உணவுப் பொரட்கள் வழங்குதல், உரங்கள் வழங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், சுயதொழில்களுக்கான பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் விசேட சுற்று நிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உருமய மற்றும் அஸ்வெசும திட்டங்கள் தேர்தல் காலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டுமேன ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
எனினும் தேர்தல் ஆணைக்குழு பல்வேறு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அறிவித்துள்ளது.