News

புதிய ‘குடிவரவு’ சட்டமூலத்துக்கு குழுவின் அனுமதி

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  ஜகத் குமார சுமித்ராராச்சி அறிவுறுத்தல் வழங்கினார்.

புதிய ‘குடிவரவு’ சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் ஏறத்தாழ பத்து லட்சம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டபோதிலும்  அவர்களில் 23% பேர் மட்டுமே வெளிநாடு சென்றதாகவும், எஞ்சிய 77% பேர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) ஒக்டோபர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை  கோருவதற்கு வாய்ப்புள்ளது என்றும், அதனால் அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் முடிந்தவரை மக்களை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுவின் தலைவர் தெரிவித்தார். எனினும், பணம் செலுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்பதனால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில், கோரப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவுத் மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.
அவ்வாறில்லை எனில் திணைக்களமும் அரசாங்கமும் மக்கள் மத்தியில் கடும் வெறுப்புக்கு ஆளாவதை தடுக்க முடியாது என குழுவின் தலைவர் கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்தியா மற்றும் நேபாளம் செல்லும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய ‘குடிவரவு’ சட்டமூலத்தை பரிசீலித்த குழு அது தொடர்பில் அதிகாரிகளிடம் விடயங்களை கேட்டறிந்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் 2024 ஜூன் 20 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை 2017 இல் வரைபு செய்ய ஆரம்பிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார். குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் மற்றும் 1971 இன் 53 ஆம் இலக்கமுடைய வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளியேறல் அனுமதிப் பத்திரச் சட்டம் என்பன தற்போதைய சமூக, தொழில்நுட்ப நிலைமைகளுக்குப் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு, அது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த சட்டமூலம் கொண்டுள்ளதாகவும் இங்கு புலப்பட்டது. விசேடமாக இந்நாட்டில் மனிதக் கடத்தல் (Human Smuggling) தொடர்பில் முதன்முறையாக இந்தப் புதிய சட்டமூலம் ஊடாகத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன், புதிய தொழில்நுட்பத்துடன் திணைக்களம் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருபோருக்குப் பொருந்தக்கூடிய ஏற்பாடுகள் உள்ளிட்ட புதிய சட்டங்களை இந்தப் புதிய சட்டமூலம் கொண்டுள்ளது. பலரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக  இலுக்பிட்டிய மேலும் குறிப்பிட்டார். நீண்ட நாட்களாக தாமதமான இந்த சட்டமூலம் காலத்துக்கேற்ற முக்கியமானது சட்டமூலம் என்றும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்கள ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பான முன்மொழிவை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கிய குழுவின் தலைவர் குறிப்பிடுகையில்,  இச்சட்டத்தை மேலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தற்போதுள்ள தடைகளை நீக்குவதற்கு இது தொடர்பான முன்மொழிவுகளை 2 வாரங்களுக்குள் குழுவிடம் வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு குழு அறிவித்தியது.

அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன்,  ஜோன் செனவிரத்ன,  உதயன கிரிந்திகொட,  குணதிலக ராஜபக்ஷ,  ஜயந்த வீரசிங்க,  இஷாக் ரஹுமான்,  சுதத் மஞ்சுள,  குமாரசிறி ரத்நாயக்க மற்றும்  மதுர விதானகே ஆகிய குழு உறுப்பினர்களும், குழுவின் உறுப்பினர்களல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button